ஐயனார்

The script ‘ஐயனார்’ pays homage to all the defense personnel. It is a heartfelt salute, especially dedicated to the army personnel who have bravely guarded and continue to guard our borders in sub-zero temperatures, ensuring our safety day and night.

aiyanar_final_photo
இனிய காலை,
அலுவலுக்குத்தயாராகி
கதவைத்திறந்து 
வெளியே அடிவைத்தால் 
சுவாசம் புகையானது 
பச்சைப்புல் தரையே மெல்லிய வெள்ளைப்போர்வையில்
ஐயோ....
பதினைந்து நிமிட நடை - ஐஸ் பெட்டிக்குள் 
இரயில் ஏறும்முன் 
என்று படத்தது நெஞ்சம்

இது லண்டனின்
யதார்த்த டிசம்பர் காலை

கொதிக்கும் கதிரவன் - சென்னையில்
குளிருக்கு பம்மி தீவெட்டி வெளிச்சமாய் ஒளி அளித்து, 
சூடடங்கி பொலிகிறான் - லண்டனில்

இலை உதிர்ந்த வீதியில்
அரை நிர்வாண மரங்களினிடையே பாதை - நடை ஆரம்பம்
எஞ்சிய இலை அசைவதை உணர்ந்து
கவசமாய் பரமசிவன் பாம்பாய் தொங்கிய
Shawl உயர்த்தி மூக்குவரை முகம்முட
குளிர் உறைந்த விரல்கள் தயாராகும்முன்
ஒரு லட்சம் கூர்மை ஊசிகளைப்பிரித்தெய்த அம்பென
Artic காற்றவள் வருட,
குருதி உறைந்தது - முகத்தில்

வேர்வை சிந்தி சேர்த்த பைசாவும்
குளிர் கடந்து சேமித்த பென்சும் ஒன்றென
பதினைந்தே நிமிடம் குளிர் தாங்கி நடக்க சிணுங்கும்  நான்...

குளிரே வீடாய்
பனிப்படுக்கையே தளமாய்
தலைக்கவசமே கூரையாய்
ஆயுதமதை கையிலேந்தி
நித்தமும்
உடல் உறைந்து
விரல்கள் மறத்து
பனி போர்த்தி
பந்தங்களைப்பிரிந்து
வருடக்கணக்காய் விடை தெரியா வேங்கையாய்
எல்லை காக்கும் இச்சாமிகள்
ஐயனார்களென எண்ணியபோது
குளிரின் தாக்கம் கடுகானது
உடலும் சூடானது
விரைவாய் நடந்தேன்
விடை தெரியா பல கேள்விகளை நெஞ்சிலேந்தி.

                      -----   என்று குளிர் கடந்த ஆனந்தன் -----